Monday 9 March 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - ஈசாப் தங்கமுட்டை வாத்து கதையிலிருந்து, முதலீடுகளை பேராசைப்பட்டு இழக்காமல் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்

ஈசாப்பின் தங்க முட்டையிடும் வாத்து கதையை நாம் அறிந்திருப்பாம். அந்தக் கதையாவது, ஒரு விவசாயி தங்க முட்டையிடும் வாத்து வளர்த்து வந்தான். அந்த வாத்து தினமும் ஒரு தங்க முட்டையிடும். தினமும், அந்த தங்க முட்டையை, விவசாயி விற்று, வெகு சீக்கிரத்தில் அதிக பணம் சேர்த்தான். திடீரென்று, ஒருநாள், பேராசை காரணமாக, தினமும் வரும் ஒரு தங்க முட்டைக்கு பதிலாக, வாத்தைக் கொன்று, எல்லா முட்டைகளையும், ஒரே நாளில் அடையலாம் என்று நினைத்தான். வாத்தைக் கொன்றபோது, அதன் வயிற்றில் இருந்த ஒரே தங்க முட்டையைத் தவிர, வேறு இல்லாததால், பேராசையினால், எதிர்காலத்தில் கிடைக்க இருந்த, தங்க முட்டைகளை இழந்துவிட்டோம் என, எண்ணி வருந்தினான்.

நாமும், இதைப்போல, செய்த முதலீடை நீண்ட நாட்களுக்கு வைத்திருந்தால் மட்டுமே, அதற்கான பலன்கள் நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து உதவி செய்யும். பேராசைப்பட்டு, குறுகிய கால லாபத்திற்கு, முதலீட்டை விற்று பணமாக்க நினைத்தால், அதன் எதிர்கால லாபங்களை நாம் இழந்து விடுவாம்.
உதாரணமாக, உங்களிடம் ஒரு நிறுவனத்தின் பங்கு(Share) உள்ளது என்றால், அந்த பங்கு அவ்வப்போது, ஈவுத் தொகையை (Dividend) வழங்கிக் கொண்டிருக்கும். நிறுவனத்தின் பங்கு உயரும்போது, அவ்வப்போது, கிடைக்கும் ஈவுத் தொகையைவிட, உடனே கிடைக்கும் பங்கு விற்றபணம் அதிகமாக கிடைக்கும் என்று பேராசைப்பட்டு, பங்கை விற்று, பணமாக்கினால், அந்த பங்கின் எதிர்கால லாபங்களை நாம் இழக்க நேரிடும். இந்த உதாரணம், உங்களுடைய வாடகைக்கு விடப்பட்ட வீடு, பரஸ்பர நிதி முதலீடு வகையறா முதலீடுகளுக்கும் பொருந்தும்.

Sunday 8 March 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - எறும்பு வெட்டுக்கிளி ஈசாப் கதையிலிருந்து, ஓய்வு காலத்திற்கான சேமிப்பின் அவசியத்தை உணருங்கள்

நாம் எல்லோரும் ஈசாப் கதைகளை அறிந்துள்ளோம். அவற்றில், 'எறும்பு மற்றும் வெட்டுக்களி' கதை மிகவும் பிரபலம். அந்தக் கதையாவது, வெயில் காலத்தில், எறும்பு கடினமாக உழைத்து, திட்டமிட்டு, குளிர்காலத்திற்கான தானியங்களை சேமித்து வைக்கத் தொடங்கும். ஆனால், வெட்டுக்கிளியோ, குளிர்காலத்திற்கு திட்டமிடாமல், கேளிக்கைகளில் பொழுதை செலவழித்துக் கொண்டிருக்கும். வெட்டுக்கிளி எறும்பிடம் 'குளிர்காலத்திற்கு நேரம் அதிகமாக உள்ளது. இப்போதைக்கு தேவையான தானியங்கள் உள்ளன. ஏன் குளிர்காலத்தைப் பற்றிக் கவலைப் படுகிறாய்? ' என்று ஏளனம் செய்யும். வெயில் காலம் முடிந்து, குளிர்காலம் வரும். குளிர்காலத்தில், எறும்பு உணவைப் பற்றிக் கவலைப்படாமல், சேமித்த தானியங்களைக் கொண்டு, தன்னுடைய பசியைத் தீர்த்துக் கொள்ளும். ஆனால், வெட்டுக்கிளியோ, தானியங்கள் சேமிக்காத்தால், பசியால் வாடி உயிர் துறக்கும்.

இதைப்போலத்தான், நாம் எறும்பைப் போல், நம்முடைய பணம் ஈட்டும் காலத்தில்(வாழ்வின் வெயில் காலம்), ஓய்வு காலத்திற்கான(வாழ்வின் குளிர்காலம்), போதிய சேமிப்பை சேர்க்க வேண்டும். அவ்வாறு, நாம் திட்டமிட்டு, நம்முடைய ஓய்வு காலத்திற்கு பணம் சேமித்திருந்தால், நாம் யாரையும் கையேந்தாமல், சேமித்த பணத்தைக் கொண்டு, நமது தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ளலாம். இல்லையெனில், எதிர்காலத்திற்கு திட்டமிடாத வெட்டுக்கிளியைப் போல், திண்டாட நேரிடும்.

Wednesday 4 March 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - எப்போதும் காலவரையறை(Term) காப்பீட்டுத் திட்டத்தை மட்டும் வாங்குங்கள்

காப்பீட்டு திட்டம் என்பது சிக்கனமாக வாழும் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் கண்டிப்பாக வாங்கி இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் குடும்பத் தலைவரை நம்பி, அவரது குடும்பத்தின் எதிர்காலம் உள்ளது. எல்லாம் நல்லபடியாக நடக்கும் எனினும், ஏதேனும் அசம்பாவிதத்திற்காக காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராகினால், மன நிம்மதி இருக்கும். ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை விடவும், குறிப்பிட்ட காலவரையறை(Term) காப்பீட்டுத் திட்டம் சிறந்தது. காலவரையறை காப்பீட்டுத் திட்டத்திற்கான காப்பீட்டு விகிதாச்சாரம் (Premium) ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை விட, குறைவாக இருக்கும். குறைவான பணம் காப்பீட்டுக்கு சென்றால், மிஞ்சும் பணத்தை குடும்பத் தலைவர் சேமித்து, நல்ல விதமாக முதலீடு செய்ய முடியும். கடவுள் அருளினால், காப்பீட்டுத் திட்டத்தை உபயோகப் படுத்தும் சந்தர்ப்பம் நிகழாதிருப்பினும், இழந்த தொகை மிகக் குறைவாக இருக்கும. சேமித்த தொகை, முதலீடு செய்யப்பட்டிருப்பின், முதலீட்டின் வளர்ச்சி ஓய்வு காலத்தில் உதவும். இதை சொல்வதற்கு, கடவுள் மன்னிக்கட்டும். ஏதேனும் அசம்பாவிதம் குடும்பத் தலைவருக்கு நிகழுமானால், குறைந்த விகிதாச்சாரத் தொகைக்கு(Premium) கூட,  கிடைக்கும் தொகை கணிசமாக இருக்கும். குடும்பத்தை பணமுடையிலிருந்து காக்கும். ஒவ்வொரு குடும்பத் தலைவரும், ஆண்டு வருமானத்தைப் போல, 5 முதல் 10 மடங்கு வரை, காப்பீடு செய்வது நல்லது.

Tuesday 3 March 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - ஆசைப்பட்டு வாங்கும் பொருட்களுக்கு 'அறிமுகமில்லாத மனிதர்' விதியைப் பயன்படுத்துங்கள்

ஏதேனும் பொருளை திடீரென ஆசைப்பட்டு வாங்க நினைத்தால், 'அறிமுகமில்லாத மனிதர் விதி'யைப் பயன்படுத்துங்கள். அதாவது, நீங்கள் ஆசைப்பட்ட பொருளுக்கான பண மதிப்பை அல்லது ஆசைப்பட்ட பொருளை அறிமுகமில்லாத நபர், உங்களுக்கு பரிசாக அளிக்க முன்வந்தால், நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த பொருளின் பண மதிப்பை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்களானால், அந்த ஆசைப்பட்ட பொருளை வாங்காதீர்கள். அந்தப் பொருளை நீங்கள் தேர்ந்தெடுத்தால், அந்தப் பொருள் உங்களுக்கு அவசியம் என்று அர்த்தம். உதாரணமாக, நீங்கள் ஒரு புதிய விலையுயர்ந்த கைபேசி வாங்க எண்ணுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த விலையுயர்ந்த கைபேசி மதிப்பு 50,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அறிமுகமில்லாத நபர், 50,000 ரூபாய் அல்லது விலையுயர்ந்த கைபேசி இரண்டையும் இரு கைககளில் ஏந்தி, இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும், நீங்கள் பரிசாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினால், நீங்கள் 50,000 ரூபாய் எடுத்துக் கொள்வீர்களா, கைபேசியை எடுத்துக் கொள்வீர்களா என்று யோசனை செய்யுங்கள். இந்த விதி, உங்களுக்கு பணத்தின் மதிப்பை தெரியப்படுத்தும். மேலும், தேவைகளுக்கும், தேவையற்ற ஆசைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரியப்படுத்தும். வீண் செலவைத் தவிர்க்கலாம்.

Sunday 1 March 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - பணத்திற்கு வரைமுறையிட்டு (Budget) செலவழியுங்கள்

நிர்வகித்தல்(Management) துறையின்படி, எதனை அளக்க முடியாதோ, அதனை கட்டுப்படுத்த முடியாது(Which cannot be measured, cannot be controlled). உங்களுடைய செலவுகளை அளந்து வரைமுறைப் படுத்துங்கள். இதைத்தான் நமது பெரியவர்கள் 'ஆற்றிலே கொட்டினாலும் அளந்துக் கொட்டு' என்று கூறினார்கள். வரைமுறைக்குட்பட்டு, செலவழியுங்கள்.  ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும், உங்களுக்கு பலவிதமான செலவுகளுக்கு வரைமுறையிடுங்கள். உங்கள் செலவுகளை பின்வருமாறு வகைப்படுத்துங்கள்; உணவு, தின்பண்டங்கள்,  வீட்டு வாடகை, பொழுதுபோக்கு, ஹோட்டல், சினிமா, சஞ்சிகை, காப்பீட்டுத் தொகை, வீட்டுக் கடன் தவணை, தொலைபேசி கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைக்காட்சிக் கட்டணம் வகையறா. செலவு வகைகள், வீட்டுக்கு வீடு மாறுபடும். ஒவ்வொரு வகைக்கும், குறிப்பிட்ட தொகையை ஒதுக்குங்கள். அந்த மாதத்தில், செலவாகும் தொகையை, அவ்வப்போது அந்த வகையின் கீழ் கூட்டிக் கொள்ளுங்கள். செலவு, வரைமுறையைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாதக் கடைசியில், ஒவ்வொரு வகையிலும், வரையறுத்த தொகையையும், செலவழித்த தொகையையும் ஒப்பிட்டு பாருங்கள். செலவு வரைமுறையைத் தாண்டினால், அகத்தாய்வு செய்யுங்கள். உங்களுக்கு கட்டுப்பாடு இல்லாமையால், செலவு வரைமுறையத் தாண்டலாம் அல்லது உங்கள் வரைமுறைப் பணம் குறைவாக இருக்கலாம். கட்டுப்பாடு இல்லையெனில், செலவைக் குறைப்பேன் என்று சங்கல்பம் எடுத்துக் கொள்ளுங்கள். வரைமுறை குறைவாக இருப்பின், வரைமுறையை அதிகப் படுத்துங்கள். வரைமுறை அதிகமாக இருப்பின், குறையுங்கள். அது, உங்களுக்கு மேலும் கட்டுப்பாட்டைக் கொடுக்கும். ஒவ்வொரு வகையிலும், செலவைக் குறைத்து, பணத்தை சேமியுங்கள். சேமித்த பணத்தை முதலீடு செய்யுங்கள்.

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - கடனை ஒழிக்க கடன் பனிப்பந்து முறை(Debt Snowball approach)

டேவ் ராம்சே(Dave Ramsey) என்பவர் கடனை ஒழிக்க 'கடன் பனிப்பந்து முறை' (Debt Snowball approach) என்பதை வகுத்தார். அதன்படி, உங்களுடைய கடன்களை (வீட்டுக் கடன் தவிர மற்றவை மட்டும்- வீட்டுக் கடன் தவணையை செலுத்தி வாருங்கள், பிற கடன்களை அடைத்தபின், அதை அடைக்கலாம்) மிகக் குறைந்த அசல் தொகையிலிருந்து, மிக அதிக அசல் தொகை வரை, வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கடனுக்கும், குறைந்தபட்ச பாக்கி(Minimum Balance) பணத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். இரு கடன்களின் அசல் சமமாக இருந்தால், அதிக வட்டிக்கடனுக்குப் பின், குறைந்த வட்டிக் கடனை வரிசைப் படுத்துங்கள். கடனை அடைக்க, ஒரு மான் தன்னைத் துரத்தும் சிறுத்தையிடமிருந்து தப்பிக்க, எந்தளவிற்கு தீவிரமாக முயற்சி செய்யுமோ(Gazelle Intensity), அந்த அளவிற்கு தீவிரமாக, காரியத்தில் இறங்க வேண்டும் என்கிறார். பணத்தை வரைமுறையிட்டு (Budget) பணத்தை சேமியுங்கள். முடிந்தால், அதிக பணம் சம்பாதிக்க வழிமுறையைத் தேடுங்கள். உதாரணமாக, ஆசிரியராக இருப்பவர், வேலை நேரம் போக, டியூஷன் எடுத்து சம்பாதிக்கலாம்.  மிகக் குறைந்த கடனைத் தவிர, மற்ற கடன்களுக்கு குறைந்தபட்ச பாக்கி பணத்தை ஒதுக்கிவிட்டு, மிஞ்சும் பணத்தை குறைந்த பட்ச கடனின் அசலை திருப்பித் தர உபயோகப் படுத்துங்கள். மனோதத்துவத்தின் படி, மிகச் சிறிய கடனை முழுதாக அடைத்தவுடன், கிடைக்கும் ஊக்கம், மற்ற கடன்களை அடைக்க உதவும் என்கிறார். ஒரு கடனை அடைத்தவுடன், அந்தக் கடனை, உங்களுடைய கடன் வரிசையில், கோடிட்டு அடித்து விட்டு, மேல் சொன்ன முறையை, இரண்டாவது கடனுக்கு பயன்படுத்துங்கள். இதே வழிமுறையை மீதமுள்ள கடன்களுக்கும் பயன்படுத்துங்கள். எல்லா கடன்களையும் முழுதாக அடைத்து விடுவதே கடன் பனிப்பந்து முறையின் குறிக்கோள்.

உங்களிடம் 7000 ரூபாய் இருப்பின், பனிப்பந்து கடன் ஒழிப்பு முறைப்படி, குறைந்தபட்ச 5000 ரூபாயை, இரண்டாவது கடனுக்கு ஒதிக்கியபின், மீதமுள்ள 2000 ரூபாயை, முதல் கடனின் அசலை அடைக்க உபயோகப் படுத்துங்கள்.

மேலும் அறிந்துக் கொள்ள, இந்த சுட்டியை தட்டுங்கள் ; http://www.daveramsey.com/article/get-out-of-debt-with-the-debt-snowball-plan/




Thursday 26 February 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - கடனில்லாத வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை

வேதாத்திரி மகரிஷி அவர்கள் கடனைப் பற்றிக் கூறும் போது, கடன் நெருஞ்சி முள்ளைப் போன்றது என்பார். நெருஞ்சி முள் சிறிதானலும், அது உடம்பில் உள்ளவரை, கொடுக்கும் வலி தாங்க முடியாதது. அதேபோல, கடன் நமது வாழ்க்கையில் வந்துவிட்டால், அது கொடுக்கும் மன இறுக்கம் மிக அதிகம். கம்பன் கூட 'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று ராவணன் ராமனிடம் தோல்வி கண்டபோது கலங்கியதை உவமையுடன் விளக்கினார். எந்தப் பொருளை வாங்கும்போதும், அதற்கான பணத்தை சேமித்து, நமது வாங்கும் திறனை அதிகரித்துவிட்டு, பணம் கொடுத்து வாங்க வேண்டும். கடன் அட்டை கொண்டோ, நண்பர்கள் அல்லது வங்கியில் கடன் வாங்கியோ, வாங்கக் கூடாது. சொந்த தொழில் தொடங்க, வீடு வாங்குவதற்காக தவிர, மற்ற சமயங்களில் கடன் வாங்க வேண்டாம்.  தொழில் தொடங்க அதிக முலதனம் தேவை. வீடு என்பது அத்தியாவசியமான விஷயம், அவைகளுக்கு மட்டும் கடன் வாங்கலாம். அவைகளுக்கு வட்டி விகிதம் குறைவு. மேலும், அரசாங்கத்தின் வரி விலக்கு உண்டு. அவைகளுக்கு கூட, எவ்வளவு குறைவாக கடன் வாங்க இயலுமோ, அவ்வளவே வாங்க வேண்டும். அதையும் கூட, வெகு சீக்கரத்தில் அடைத்து விட வேண்டும். சொந்தமாக பணம் சேர்த்து, வீடு வாங்கினால், தொழில் தொடங்கினால், இன்னும் உசிதம். கடனில்லாத வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை.