Tuesday 18 December 2012

சிக்கன சிந்தனை 6: உங்களின் காபி விளைவு(Latte Effect) என்ன?!

நாம் எவ்வளவோ செயல் விளைவுகளைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். நமது நாட்டு விஞ்ஞானி C.V.ராமன் அவர்கள் கண்டுபிடிப்பை 'ராமன் விளைவு' என்று கூறுவோம். அது என்ன 'காபி விளைவு'?! இது தனிமனித நிதியின்(Personal Finance) ஒரு கோட்பாடு. இதைக் கண்டுப்பிடித்தவர் பெயர் டேவிட் பேக்(David Bach).

டேவிட் பேக் தனிமனித நிதி மற்றும் சிக்கன வாழ்க்கை முறையின் ஒரு ஆலோசகர். அவர் தனிமனித நிதி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு பெண்மணியின் காபி பிரியத்தினால் செலவாகும் கணக்கை போட்ட போது, வகுப்பில் உள்ள எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் அமெரிக்கப் பெண்மணி 'ஸ்டார் பக்ஸ்' காபி(Starbucks) மற்றும் பன்னை விரும்பி தினமும் உண்டு வருபவர். ஒரு நாளைக்கு அவருக்கு செலவாகும் காபிக் கணக்கை 30 ஆல் பெருக்கிய போது, அது மிகப் பெரிய செலவாக மாத இறுதியில் தோன்றியது. அதாவது, சிறிய அளவில் தெரியும் ஒரு பழக்கவழக்க செலவு, மாதக் கடைசியில் மிகப் பெரிய செலவாக அமைந்துவிடும். இத்தகைய சிறிய பணம் நாம் அறியாமல், பொத்தல் உள்ள பாத்திரத்திலிருந்து தண்ணீர் செலவாகுவதைப் போல், மாதக் கடைசியில் பெரிய பணமாக செலவாகுவதை 'காபி விளைவு'(Latte Effect) என்று பெயரிட்டார்.

Thanks: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/45/A_small_cup_of_coffee.JPG/275px-A_small_cup_of_coffee.JPG

உதாரணமாக, நீங்கள் தினமும் வீட்டின் அருகிலுள்ள ஒரு ஓட்டலில்  20 ரூபாய் காபி அருந்துவீர்கள் என்று கணக்கில் கொண்டால்,

ஒரு மாதத்தில் நீங்கள் காபிக்காக செலவழிக்கும் பணம், 20 x 30 = 600 ரூபாய்.
ஒரு வருடத்திற்கு நீங்கள் காபிக்காக செலவழிக்கும் பணம்,600 x 12 = 7200 ரூபாய்.

நீங்கள் இரண்டு வேளை காபி அருந்தினால் ஆகும் செலவு = 7200 x 2 = 14400 ரூபாய்

வருடக் கடைசியில் பார்க்கும் போது, இரண்டு வேளை காபிக்காக மட்டும் நீங்கள் 14400 ரூபாய் செலவு செய்துள்ளீர்கள். இதைத் தான் நாம் 'சிறு துளி பெரு வெள்ளம்' என்று குறிப்பிடுவோம்.

இந்த ஒரு வேளை காபியை நீங்கள் வீட்டில் குடித்தால், உங்களுக்கு ஆகும் செலவு ஒரு காபிக்கு 5 ரூபாய் என்று கணக்கில் கொண்டால்,

ஒரு மாதத்தில் நீங்கள் காபிக்காக செலவழிக்கும் பணம், 5 x 30 = 150 ரூபாய்.
ஒரு வருடத்திற்கு நீங்கள் காபிக்காக செலவழிக்கும் பணம், 150 x 12 = 1800 ரூபாய்.

நீங்கள் இரண்டு வேளை காபி அருந்தினால் ஆகும் செலவு = 1800 x 2 = 3600 ரூபாய்

எனவே, நீங்கள் வீட்டிலேயே காபி குடிப்பதால், சேமிக்கும் பணம்; 14400 - 3600 = 10800 ரூபாய். நீங்கள் ஒரு நாளைக்கு  ஒரு வேளை காபி குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டால், சேமிக்கும் பணம் 7200 ரூபாய் அல்லது 1800 ரூபாய். சிறிதாக நீங்கள் இந்த சேமித்த பணத்தை முதலீடு செய்தால், உங்களுடைய பொருளாதாரம் உயரும்.

இது காபிக்கு மட்டுமல்ல, பல்வேறு சிறிய அன்றாட செலவுகளுக்கும் பொருந்தும். சிலர் காபிக்கு பதிலாக சிகரெட், மினரல் வாட்டர், தெருவோர பஜ்ஜி கடை, லாட்டரி டிக்கெட், பாக்கு, புகையிலை, சஞ்சிகைககள் வகையறாக்களில் அன்றாடம் பணத்தை செலவு செய்வர். உங்களுடைய காபி விளைவு என்ன என்று அறியுங்கள். சிகரெட் போன்ற சில பழக்கங்களால் பணம் தவிர உடல் நலமும் கெடும். இத்தகைய காபி விளைவு செலவை குறைக்க அல்லது தவிர்க்க முடியுமா என்று சிந்தித்து செயல் படுத்துங்கள்.

உங்களுக்கான கேள்வி: உங்களின் காபி விளைவு என்ன?!

 

Monday 3 December 2012

சிக்கன சிந்தனை 5: வரவை விட செலவு குறைவாக இருக்கட்டும்


"Annual income twenty pounds, annual expenditure nineteen [pounds] nineteen [shillings] and six [pence], result happiness. Annual income twenty pounds, annual expenditure twenty pounds ought and six, result misery. - Charles Dickens in David Copperfield novel.

'ஆண்டு வரவு இருபது பவுண்டு, ஆண்டு செலவு பத்தொன்பது பவுண்டு பத்தொன்பது ஷில்லிங், ஆறு பென்ஸ், முடிவு சந்தோஷம்.
ஆண்டு வரவு இருபது பவுண்டு, ஆண்டு செலவு இருபது பவுண்டு ஆறு ஷில்லிங், முடிவு துன்பம்'
- சார்லஸ் டிக்கன்ஸ், டேவிட் காப்பர்ஃபீல்டு புதினத்தில்






Thanks: http://i.telegraph.co.uk/multimedia/archive/02072/PD2655229_2668291-_2072325i.jpg

'வரவை விட செலவு குறைவாக இருக்கட்டும்' என்பது என்ன தெரியாத விஷயமா? என்று நீங்கள் என்னைக் கேட்பது புரிகிறது. ஆனால், இன்றைய சமுதாயத்தில் பலர் மாத சம்பளத்திலிருந்து மாத சம்பளத்திற்கான வாழ்ந்து வருகின்றனர். இதை ஆங்கிலத்தில் 'Paycheck to Paycheck Lifestyle" என்று கூறுவர். இதைத்தான் நாம் தமிழிலும் 'விரலுக்கேத்த வீக்கம் இருக்க வேண்டும்' என்ற பழமொழியில் குறிப்போம். சில குடும்பங்களில், மாதத்தின் கடைசி பத்து நாட்களை மிகவும் கஷ்டப்பட்டு கடப்பர்.

நாம் முன்பே சிந்தித்தவாறு, மாத ஆரம்பத்திலேயே பட்ஜெட் போட்டு, அதாவது செலவுகளைத் திட்டமிட்டு, ஒவ்வொரு செலவையும் வரவு செலவு கணக்கில் வைத்து, சேமிப்பதை வழக்கமாகக் கொண்டால், வாழ்வில் பணத் திண்டாட்டத்திற்கு ஆளாக மாட்டோம். தேவைக்கு போக மிச்சப் பணத்தில், அவசரத் தேவை நிதியை முதலில் சேமித்து தயார் செய்யுங்கள். பின்னர்,ிற பொருட்களை வாங்குங்கள். எந்தப் பொருளையும் வாங்க பணம் செலவழிப்பதற்கு, உங்களிடம் பணம் இல்லையெனில் கடன் வாங்கி வாங்க வேண்டாம். அதற்கான பணத்தை மாதா மாதம் சேமித்து, பின்னர் அந்தப் பொருளை வாங்குங்கள். கடன் அன்பை முறிக்கும் என்பது ண்பர்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்வின் அமைதியையும் சேர்த்துதான் முறிக்கும். உங்களுடைய வரவுக் கேற்ற செலவுகளை செய்யுங்கள். உங்களால் பைவ்ஸ்டார் ஹோட்டலில் உணவு உண்ணுமளவுக்கு, வரவு இல்லையா, அருகிலுள்ள உணவகத்தில் உண்பதற்கு செலவு செய்யுங்கள். உங்கள் வரவுக்கேற்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். வீடு வாங்குதல், மேல்படிப்பிற்கான கடன், தொழில் ொடங்குவதற்கு என்ற சில காரணங்களை விட, பிற காரணங்களுக்காக கடன் வாங்குவது என்பது தவிர்க்கப் பட வேண்டியது. 


ஏற்கனவே பல கடன்கள் வாங்கியிருந்த, எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் திருமணத்தின் தேனிலவுக்காக, சில லட்சம் செலவில் வெளிநாடு சென்றான். எப்படிடா பணம் என்று கேட்டதற்கு, கடன் வாங்கினேன் என்று கூறினான். எப்படி கடனை அடைப்பாய் என்று கேட்க, இன்னொரு கடன் எடுத்து அதை அடைப்பேன் என்றான்.
த்தகைய வரவுக்கு மீறிய செலவழிக்கும் வாழ்க்கை மிகவும் ஆபத்தானது. கடன் மேல் கடன் வாங்குவது என்பது, ஒருவன் தான் விழுந்துவிட்ட குழியை மேன்மேலும் தோண்டிக் கொள்வதைப் போல ஆபத்தானது. மேல் ஏறி வருவது கடினமாகி விடும்.

நம்முடைய வாழ்க்கையில் இந்தச் சிந்தனையைப் சிந்தித்து பயன்படுத்தி பயனடைவோம்.




Wednesday 28 November 2012

சிக்கன சிந்தனை 4 - அவசர தேவை நிதியை எப்போதும் வைத்திருங்கள்


ன் நண்பன் ஒருவன் அவனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை, அவசரத் தேவை எனப் பணம் கேட்டான். நான் மட்டுமல்லாது மேலும் பலரிடமும் கடன் வாங்கினான். அவன் சிக்கனமான வாழ்க்கை வாழ்பவனல்ல. சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருபவன். அவன் அவசரத் தேவைக்கான நிதி
யை திட்டமிடவில்லை. கடன் அன்பை முறிக்கும் என்று கூறுவதைப் போல, பல நண்பர்கள் பணத்தை திருப்பிக் கேட்டபோது, அவனால் தர இயலாமல், வேறு ஊருக்கு மாற்றலாகி விட்டான். அவனுடைய திட்டமின்மையினால், பொருள் நலத்தையும், நட்பு நலத்தையும் இழந்து விட்டான்.

நாம் ம்முடைய அவசரத் தேவைகளுக்கான நிதியை எப்பொழுதும் தயாராக வைத்திருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் Emergency Fund என்று கூறுவார்கள். நமது வாழ்க்கை திடீரென்று அவசரமாக நமக்குப் பணம் தேவைப்படலாம். உதாரணமாக, வீட்டின் கூரையில் திடீரென்று நீர் கசிவு ஏற்பட்டு உடனே தீர்க்க வேண்டிய நிலைமை வரலாம், வீட்டு நபர் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்படலாம், தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவருக்கு ஆட்குறைப்பினால் வேலை இழக்க நேரிடலாம். அந்த அவசர பணத் தேவை நேரங்களில், அவசர தேவை நிதி கைகொடுக்கும். யாரையும் கையேந்தும் நிலை வராது.



 

அவசர தேவை நிதி என்பது பின்வருமாறு இருக்க வேண்டும். அப்போதுதான், அவசர தேவை நிதியை நாம் இழக்காமல் இருப்ோம், மேலும், அவசரத் தேவைக்கு நமக்கு உதவும்.

  • பணத்தை இழக்க வாய்ப்புள்ள பங்கு சந்தையிலோ அல்லது பரஸ்பர நிதிகளிலோ முதலீடு செய்யப் படக்கூடாது.
  • பணம் நீர்மத் தன்மையுடன்(Liquidity) இருக்கவேண்டும். அதாவது, எப்போது வேண்டுமானாலும் எடுப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.
  • ன் அட்டை பணம் அல்ல. ஏனென்றால், கடன் அட்டை பணம் உங்களுடைய பணம் அல்ல, எப்போது வேண்டுமானாலும் கடன் அட்டை ரத்து செய்யப்படலாம். கடன் அட்டை பணத்தை உடனே நீங்கள் திரும்செலுத்த வேண்டும். 
  • பணம் சேமிப்பு கணக்கில் இருக்கலாம். அதில் வருகிற குறைந்த வட்டியை பற்றி வருந்த வேண்டாம். ஏனென்றால், அவசர நிதி பணம் நீர்மத் தன்மையுடன் இருக்க வேண்டும். உடனே எடுப்பதற்குத் தோதுவாக, பற்று அட்டை(Debit Card) உதவும்.


சரி சார். எவ்வளவு பணத்தை நான் அவசர நிதியாக வைத்துக் கொள்ளலாம் என்றால், 3 முல் 6 மாதத்திற்கான மாத செலவை நீங்கள் அவசர நிதியாக வைத்திருக்கலாம். துணிச்சலான மனிதர் எனில் 3 மாதமே போதும் என எண்ணலாம். கொஞ்சம் கமான மனிதர் எனில் 6 மாதச் செலவை வைத்திருக்கலாம்.

உதாரணமாக, மாத செலவு 15,000 எனில் 45,000(3 மாத செலவு) அல்லது 90,000(6 மாத செலவு) த்தை அவசர நிதியாக வைத்திருக்கலாம்.

மேலே சொன்ன எல்லா காரணங்களையும் விட, ஒரு முக்கியமாக காரணம் உள்ளது. அது, மன அமைதி. அவசர நிதி உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். பிரச்சனைகளை சந்திக்கும் துணிவைத் தரும்.

Monday 26 November 2012

சிக்கன சிந்தனை 3: திட்டமிட்டு செலவழியுங்கள். பட்ஜெட் போடுங்கள்


ஒவ்வொரு வருடமும் இந்திய பட்ஜெட்டில் என்ன என்ன திட்டங்கள் அறிவிக்கிறார்கள் என்பதை கவனிக்கின்ற நாம், நமது வீட்டிற்கான பட்ஜெட் போடுகிறோமா?! என்று கேட்டால் சில குடும்பங்களைத் தவிர, பல குடும்பங்களில் இல்லை என்றே ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. அட எதுக்கு சார் வீட்டுக்கெல்லாம் பட்ஜெட் என்று நீங்கள் கேட்டால், அதன் அவசியத்தை நாம் உணர வேண்டும்.


Thanks: http://abhisays.com/wp-content/uploads/2008/02/budget2008.jpg


விஜய் டிவியில் 'உன்னால் முடியும்' நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது, ராமராஜ் வேட்டி சட்டை நிறுவனத்தின் தலைவர் நாகராஜ் அவர்களிடம், கோபிநாத் ஒரு கேள்வி கேட்டார்.

'எங்க பார்த்தாலும் ராமராஜ் விளம்பரமாகவே இருக்கே. ரொம்ப பணம் விளம்பரத்துக்கு செலவழிப்பீங்களா?'

'எங்க ஆடிட்டர் பட்ஜெட் போட்ட பணத்துக்கு மேல, ஒரு பைசா கூட எங்களால விளம்பரத்துக்கு செலவழிக்க முடியாது. நானே நினைச்சாலும் முடியாது' என்று நாகராஜ் கூறினார்.

அவ்வளவு திட்டமிடல் இருந்தால் மட்டுமே ஒரு நிறுவனத்தால் பிரகாசிக்க முடியும். ஆகவே, பணத்திற்கு திட்டமிடல் அல்லது பட்ஜெட் ரொம்ப முக்கியம்.உங்கள் வீட்டிற்கு நீங்கள்தான் நிதி அமைச்சர். உங்களுடைய நிதி எவ்வாறு செலவாக வேண்டும் என்கிற திட்டம் முக்கியம். ஆங்கிலத்தில் இதை zero based budgeting என்று கூறுவர். அதாவது, நீங்கள் மாத ஆரம்பத்தில் திட்டமிட்ட பணத்திற்கும் செலவழித்த பணத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம், பூச்சியமாக இருக்க வேண்டும்.

பூச்சியத்தை அடிப்படையாக கொண்ட பட்ஜெட்;(Zero Based Budgeting)

Budgeted amount at the beginning of month - Spent amount at the end of the month = 0

மாத ஆரம்பத்தில் திட்டமிட்ட பண ஒதுக்கீடு - மாத கடைசியில் செலவழித்த பணம் = 0



நாம் ஏற்கனவே பார்த்தபடி, வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்காக, அத்தியாவசிய செலவுகளையோ, உங்களுக்கு மனதிற்கு பிடித்த விஷயங்களுக்கு செலவிடுவதையோ நிறுத்த வேண்டிய அவசியமில்லை. திட்டமிடுதல் அல்லது பட்ஜெட்டின் முக்கியத்துவத்தை நாம் இங்கு உணரலாம். உங்களுக்கு வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிடுவது பிடித்த விஷயமாக இருக்கலாம். ஆனால், ஒரு மாதத்திற்கு இவ்வளவு பணம் என்று திட்டமிடுங்கள், அதற்கு மேல் ஒரு பைசாவும் செலவாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு பணம் செலவழிக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தால், ஒன்று நீங்கள் சரியாக திட்டமிடாமல் இருந்திருக்கலாம், அல்லது நீங்கள் திட்டத்தை மதிக்காமல் மீறுபவராக இருக்கலாம். சரியாக திட்டமிடாத பட்சத்தில், அடுத்த மாதத்தில் திட்டத்தை மேம்படுத்துங்கள். திட்டத்தை வேண்டுமென்ற கட்டுபாடின்றி மீறும் பட்சத்தில், நீங்கள் சிக்கன வாழ்க்கையின் அவசியத்தை உணரவில்லை என்று பொருள்.

இந்த பட்ஜெட் போடுவதில், வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் செலவழிக்க வேண்டும், எதற்கு செலவழிக்க வேண்டும், எவ்வளவு சதவிகிதம் சேமித்து முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு சதவிகதம் ஓய்வு காலத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று, மிக தெளிவாக அடிப்படை செலவுகள் வரை திட்டமிடுதல் முக்கியம். பட்ஜெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, திட்டமிட்டு வாழ்வோம் என்று நம்புகிறேன்.

Saturday 24 November 2012

சிக்கன சிந்தனை 2: வரவு செலவு கணக்கு வைத்திருங்கள்


நமது ஊர் மிராசுதார்களும், பண்ணையார்களும் எவ்வளவுதான் பணக்காரர்களாக இருந்தாலும், எப்போதும் தங்களுடைய வரவு செலவுகளை கணக்கு வைத்திருந்தனர். அதற்கென ஒரு கணக்குப்பிள்ளையை அவர்கள் வேலைக்கு நியமித்திருந்தனர். தங்களிடம் எவ்வளவு பணம் வரவாக வருகிறது, எவ்வளவு பணம் செலவாகிறது என்பதை எப்போதும் அறிந்திருந்தனர். அவ்(வாறு கவனமாக பணத்தை செலவழிக்காவிட்டால், அவர்கள் கூடிய சீக்கரம் பணத்தை இழந்து, சொத்தை இழக்க நேரிடும் என்பதை உணர்ந்திருந்தனர். அவர்களுடைய சொத்தின் நிகர மதிப்பை அறிந்திருந்தனர். அதை ஆங்கிலத்தில் Net Worth என்று குறிப்பிடுவர்.

சொத்தின் நிகர மதிப்பு =

 சொத்துக்களின் மொத்த மதிப்பு - அடைக்கப்பட வேண்டிய கடன்கள்

Networth  = Total Asset Value - Total Debts


உங்களுக்கு உங்களுடைய தற்போதைய சொத்தின் நிகர மதிப்பு தெரியாவிட்டால், நீங்கள் இன்னும் சிக்கனமான வாழ்க்கையின் முக்கியமானதொரு பழக்கத்தை பின்பற்றவில்லை என்று பொருள். உங்களுடைய எல்லா சொத்துக்களின் மதிப்பை தொகுத்து வைத்துக் கொண்டு கூட்டுங்கள். அந்த சொத்துக்கள் அசையும் அல்லது அசையா சொத்துக்களாகவோ, பணத்தின் கையிருப்பாகவோ இருக்கலாம். அடுத்து, உங்களுடைய எல்லா கடன்களையும் தொகுத்து வைத்துக் கூட்டுங்கள். அந்தக் கடன்கள் வீட்டு கடனாகவோ, வாகன கடனாகவோ, குழந்தைகளின் கல்விக் கடனாகவோ இருக்கலாம். இப்போது உங்களுடைய சொத்தின் நிகர மதிப்பை, மேற்கூறிய சமன்பாட்டால் கணக்கிடுங்கள். அது, நேர்மறை (Positive) அல்லது எதிர்மறையாகவோ (Negative) இருக்கலாம். நேர்மறையாக இருக்கும் பட்சத்தில், கொஞ்சம் திருப்தி பட்டுக் கொள்ளலாம். எதிர்மறை எனில், நீங்கள் மிகவும் முயற்சி செய்து அதை நேர்மறையாக மாற்ற வேண்டும். நேர்மறையாக இருக்கும் பட்சத்திலும், எல்லா கடன்களையும் செலுத்தி விட்டு, கடனில்லாத வாழ்க்கை வாழ்வதின் சுவையே தனி. நல்லதோரு நிகர சொத்து மதிப்பு வைத்திருக்க வேண்டியது, அதை அதிகரிக்க வேண்டியது என்பது, நிம்மதியான வாழ்க்கைக்கு அடிகோல்.

உங்களுடைய ஒவ்வொரு வரவு மற்றும் செலவையை எழுதி வையுங்கள். செலவென்பது,  ஒரு காபி குடித்த அல்லது பஸ்ஸிற்கு டிக்கெட் வாங்கியதாக கூட இருக்கலாம். வரவென்பது சம்பளமாக இருக்கலாம். ஒவ்வொரு மாத இறுதியிலும், நீங்கள் அந்த வரவு செலவு கணக்கை ஒவ்வொரு வரியாகப் படித்து, எந்த எந்த செலவு அவசியமானது, எது அனாவசியமானது என்று குறித்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவை குறைக்க, நீக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டு, அடுத்த மாதத்தில் அதைப் பின்பற்றுங்கள். இவ்வாறு செய்வதின் மூலம், உங்களுடைய வீண் செலவுகள் குறைந்து, உங்களுடைய சொத்தின் மதிப்பு கூடும்.

Thanks: http://www.diyplanner.com/files/expense_tracker_v1.0.jpg

இதை, எடை குறைப்பவரின் திட்டத்தோடு ஒப்பிடலாம். ஒரு மனிதர் எடையை குறைப்பதை குறிக்கோளாக கொள்கிறார் என்று வைத்துக் கொண்டால், அவர் ஒவ்வொரு வேளை சாப்பிடும் போதும், அதன் கலோரி மதிப்பை பார்த்து சாப்பிடுவார். அதிக கலோரி உணவுகளைத் தவிர்ப்பார். மேலும், அவ்வப்போது, தன்னுடைய எடையை பார்த்துக் கொள்வார். உடல்நலத்தை கவனித்துக் கொள்வார். அதைப் போல நீங்களும், வீண் செலவுகளை தவிர்த்து, உங்களுடைய சொத்து மதிப்பை கவனித்துக் கொள்ளுங்கள்.

Friday 23 November 2012

சிக்கன சிந்தனை 1: சீக்கிரம் கெடாத பொருட்களை மொத்தமாக வாங்குங்கள்



எனது பிறந்த நாள் வந்தபோது பைவ் ஸ்டார் சாக்லேட் பார்களை வாங்க அருகிலிருந்த பல்பொருள் அங்காடிக்கு சென்றேன். அங்கு பைவ் ஸ்டார் சாக்லேட் பார்களை சில்லரையாகவும், மேலும் மொத்தமாகவும் அலமாரியில் வைத்திருந்தனர். எனக்கு கிட்டத்தட்ட 40 முதல் 50 தேவைப்பட்டது. சில்லரையாக வாங்கினால், ஒன்று 10 ரூபாய் வீதம் 400 ரூபாய் ஆகும். ஆனால், பைவ் ஸ்டார் அட்டை டப்பாவாக வாங்கினால், அதே 40 பார்களின் விலை 340 ரூபாய்தான். ஒரு அட்டை டப்பாவில் 40 பார்கள் இருக்கும். மொத்தமாக வாங்கும் போது, பொருளின்  நிகர விலை குறைகிறது. இது கிட்டத்தட்ட எல்லா பொருட்களுக்கும் பொருந்தும். உதாரணமாக, 1/2 கிலோ காம்பிளானில் உள்ள 1 கிராம் காம்ப்ளானின் விலையை விட, 1 கிலோ காம்ப்ளானில் உள்ள 1 கிராம் காம்ப்ளானின் விலை குறைவு. இது பற்பசை, துவரம் பருப்பு முதல் சமையல் எண்ணை வரை எல்லா பொருட்களுக்கும் பொருந்தும்.

அப்ப சரி சார் ! இனிமே எல்லாத்தையும் மொத்தமா வாங்கிப் போட்டுடறேன்னு நீங்க சொன்னீங்கன்னா, அது எல்லா பொருட்களுக்கும் பொருந்தாது என்பதுதான் விடை. எந்த பொருளை நீங்கள் மொத்தமாக வாங்கினால், கெடுவதற்கு முன்பு பயன்படுத்தி விடுவீர்களோ, அந்தப் பொருட்களை மட்டும் மொத்தமாக வாங்குங்கள். உதாரணமாக, நீங்கள் கோதுமையை மொத்தமாக வாங்கிப் போடுகிறீர்கள் என்று கணக்கில் வைத்துக் கொண்டால், அது கெடுவதற்குள் நீங்கள் உபயோகப் படுத்துவிடுவீர்களா என்பதை யோசிக்க வேண்டும். என்றோ ஒரு நாள் நான் சப்பாத்தி சாப்பிட மட்டும்தான் கோதுமையை பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொன்னால், மொத்தமாக வாங்குகிறேன் என்று 10 கிலோ மூட்டை வாங்கி வைத்தால், புழு வந்து அது கெட்டு விடலாம். பணத்தை மிச்சப்படுத்துவதற்கு பதிலாக, நீங்கள் பணத்தை இழக்க நேரிடும்.

இந்தமாதிரி மொத்தமாக வாங்குவதற்கு, சில்லரை கடைகளை நாடாமல், நீங்கள் மொத்த விலை கடைகளுக்கு சென்றால், குறைந்த விலையில் நீங்கள் வாங்கலாம். சென்னையில் உள்ள சில பெற்றோர்கள் ஜீன் மாதம் பள்ளிகள் திறக்கும் நேரத்தில், நோட்டுப் புத்தகங்களை மொத்தமாக வாங்க, பாரீஸ் கார்னர் செல்வது என்பது, சிக்கனமான முறையில், குழந்தைகளின் படிப்பிற்கு பணத்தை செலவழிக்கத்தான். மொத்தமாக வாங்கும்போது, அது ஆங்கிலத்தில் சொல்வார்களே Win-Win situation(வெற்றி-வெற்றி சூழ்நிலை) என்று, உங்களுக்கு மொத்த விலையில் புத்தகங்களை வாங்க முடிகிறது, மேலும் கடைக்காரருக்கும் பொருட்களை மொத்தமாக விற்க முடிகிறது.


Thanks: http://webdevelopmenti.com/wp-content/uploads/2012/06/Make-money-by-Freelancing-and-outsourcing.jpg

இந்த மாதிரி மொத்தமாக வாங்குவதென்பது, சீக்கிரம் கெடாத பொருட்களான உடைகள், நோட்டு புத்தகங்கள் வகையறாக்களுக்கு நன்றாக பொருந்தும்.

இந்த சிந்தனையை நீங்களும் சிந்தித்து, கடைபிடித்து பயனடைவீர்கள் என நம்புகிறேன்.

Monday 19 November 2012

பணத்தை பல்மடங்காக்கும் மந்திரவாதி: கூட்டு வட்டி



முன்பு ஒரு செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒரு சாமியார் பணத்தை பானையில் வைத்து ஏதேதோ செய்தபின், பணம் பன்மடங்காக காண்பிக்கிறார். பல கிராம மக்கள் அறியாமையினால் பணத்தைப் பெருக்க, அந்த போலி சாமியாரை நம்பி பணம் கொடுத்து, இழந்ததைப் பற்றி புகார் வரவே, போலீஸ் அந்த சாமியாரை கைது செய்ததைப் பற்றிய செய்தியைக் கண்டேன்.

பணத்தை பல்மடங்காக்கும் மந்திரவாதி நிஜமாகவே உள்ளார். அவர் பெயர் கூட்டு வட்டி அல்லது தொடர்ச்சி வட்டி என்று குறிப்பிடலாம். வட்டியில் இரண்டு வகைகள் உள்ளன:


  1. தனி வட்டி (Simple Interest)
  2. கூட்டு வட்டி. (Compound Interest)


தனி வட்டிக்கான சமன்பாடு = அசல் X வருடம் X வட்டி விகிதம்

உதாரணமாக, ஒருவர் 10000 ரூபாய் முதலீடு செய்தால், 5 வருடங்களில், 5 சதவிகித வட்டியில்

தனிவட்டி = 10000 X  5   X .05
     
                      = 2500

தனிவட்டியில் 5 வருடங்களில் மொத்தப் பணம் = 10000 + 2500 = 12,500

கூட்டு வட்டியில், அசலுடன் சேர்ந்து வட்டியும், அடுத்த வருட அசலாக கணக்கெடுக்கப் படும். எனவே, அதை கணக்கில் கொள்ள,

முதல் வருடம் இறுதி:  10000 x 1 x .05 =  500

இரண்டாவது வருடம் இறுதி:  10500 x 1 x .05 = 525

மூன்றாவது வருடம் இறுதி: 11025 x 1 x .05 = 551.25

நான்காவது வருடம் இறுதி: 11576.25 x 1 x .05 = 578.81

ஐந்தாவது வருடம் இறுதி: 12155.06 x 1 x .05 = 607.75

கூட்டு வட்டியில் 5 வருடங்களில் மொத்த பணம் = 12,762.81

என்ன சார், ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லையே? என்று நீங்கள் கேட்கலாம். கூட்டு வட்டியின் திறனை அறிய பொறுமை வேண்டும். நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீட்டில் வைத்திருந்தால், அதன் பலனை அறியலாம். அதற்கு நாம் தங்க விதி 72 அறிய வேண்டும்.

தங்க விதி 72:

கூட்டு வட்டி விகிதத்தால், 72 ஐ வகுக்க, எவ்வளவு வருகிறதா, அவ்வளவு வருடங்களில், பணம் இரட்டிப்பாகும்.

உதாரணமாக, கூட்டு வட்டி விகிதம் 9 என்று கணக்கில் கொண்டால், 72/9 = 8 வருடங்களில் பணம் இரட்டிப்பாகும். பணம் குட்டி போடும் என்பார்களே, அது நிஜமாக இதுதான். நீங்கள் பணத்திற்காக வேலை செய்தது போக, பணம் உங்களுக்காக இப்போது வேலை செய்து, பணத்தை உங்களுக்கு வாரி வழங்குகிறது.

தங்க விதி 72ஐ அறிந்த்தால், இப்போது பணம் கூட்டு வட்டியில் எவ்வாறு இரட்டிப்பு ஆகிறது என்று பார்க்கலாம்.

உதாரணமாக, ராமன் என்கிற நபர், 10000 ரூபாயை 25 வயதில் 9 சதவிகத கூட்டு வட்டியில் முதலீடு செய்கிறார் என்று கணக்கில் கொள்வோம். அது எவ்வாறு பல்கி பெருகுகிறது என்பதை பின்வருமாறு காணலாம்.

வயது  முதலீட்டின் மதிப்பு
25 10,000
33 20,000
41 40,000
49 80,000
57 1,60,000
65 3,20,000


அட ! முதலீடு செய்யப்பட்ட பணம், ராமன் எந்த முயற்சியும் செய்யாமல், 40 வருடங்களில் 32 மடங்காக பெருகியுள்ளது. நீங்கள் கேட்கலாம் எங்க சார் இப்பல்லாம் 9 சதவிகிதம் கிடைக்கிறது எனலாம். பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் சில வங்கிகள் மற்றும் கடன் பத்திரங்களும் நல்ல வட்டி விகிதத்தை தருகின்றன. மேலும், எவ்வளவு குறைந்த வயதில் முதலீட்டை தொடங்குகிறோம் என்பதும் முக்கியம். ஆங்கிலத்தில் சொல்வார்களே 'Earlier the Best" எனபது, கூட்டு வட்டிக்கு நன்றாக பொருந்தும்.

thanks: http://th.physik.uni-frankfurt.de/~jr/gif/phys/einst_7.jpg

ஐன்ஸ்டீன் சொன்னார்; கூட்டு வட்டி கணிதவியலின் தலைசிறந்த கண்டுபிடிப்பு. நீங்களும் கூட்டு வட்டியின் மகத்துவத்தை உணர்ந்து, பயன்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.



Sunday 18 November 2012

சிக்கனம் தேவை இக்கணம்




சிக்கனம் என்பதற்கு ஆங்கில அகராதியில் "Frugality" என்று கூறுவார்கள். சிக்கனம் என்பதை பலவாறு நாம் விளக்கலாம். தேவையில்லாத விஷயங்களை அ்ல்லது செலவுகளைத் தவிர்த்தல், அளவாக அல்லது கவனமாக செலவழித்தல், வருமானத்திற்குட்பட்ட வாழ்க்கை வாழ்தல், பயன்படுத்தும் பொருட்களை வீணாக்கமாலிருத்தல், பணத்தை மிச்சம் பிடித்து சேமிப்பது வகையறாக்களை சிக்கனம் என்ற ஒற்றை வார்த்தை, சிறந்த முறையில் எடுத்துரைக்கிறது.

நமது முன்னோர்கள் சேமிப்பின் அவசியத்தை நன்கு உணர்ந்திருந்தனர். கிணறு தோண்டும் போது, திடீரென்று பணப் புதையல் கிடைத்தது என்றெல்லாம் நாம் கேள்விப்படும் போது, முன்னோர்களின் பண சேமிப்பின் பிண்ணனியினை நாம் அலசி ஆராய்ந்த்தில்லை. 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்று சிக்கனமாக வாழும் வாழ்க்கையின் சுவையை நமக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளனர். ஆனால், இன்றைய இளைஞர்களிடம் சிக்கன வாழ்வின் அருமை பெருமை தெரிகிறதா? என்றால், மிகக் குறைந்த அளவு மக்களே உணர்ந்துள்ளனர் என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டியுள்ளது. ஏனென்றால், முன்பு இல்லாததை விட இப்போது ஹோட்டல்களும், துரித உணவு விடுதிகளும், பல மாடி சினிமா கொட்டகைகளும் நிரம்பி வழிகின்றன. முந்தைய தலைமுறை அரசாங்க உத்தியோகத்திலிருந்து கிடைக்கும் ஓய்வூதியத்தினாலோ அல்லது ஒழுங்கான சேமிப்பினாலோ தங்களுடைய ஓய்வு காலத்தை சுகமாக ஆக்கிக் கொண்டுள்ளனர். மேலும், அவர்களுடைய வாழ்க்கையில் அன்றாட தேவைகளும், செலவுகளும், விலைவாசிகளும் இன்றைய காலம் போல பன்மடங்காக இல்லை. ஆனால், இன்றைய இளைஞர்கள் எதிர்காலத்திற்கான பணத் தேவைகளை சந்திக்க எந்த அளவிற்கு தயாராக உள்ளனர்?!

Thanks: http://blogs-images.forbes.com/sageworks/files/2011/07/piggy_bank.jpg

சிக்கனத்தின் பெருமையை உணர, புத்தரின் வாழ்வில் நடந்த ஒரு கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
ஒரு சீடன் புத்தரிடம் வந்து, 'குருவே !!! என்னுடைய ஆடை கந்தலாகி விட்டது. புதிய ஆடை வேண்டும்' என்றான்.

புத்தர் அவனை ஆழமாக நோக்கினார். அவன் கூறுவது நிஜம்தான். அவனுடைய ஆடை மிகவும் மோசமாகவே இருந்தது. அவனை கடைக்கு அழைத்துச் சென்று புதிய ஆடையை வாங்கிக் கொடுத்தார்.

சிறிது நாட்களுக்குப் பின்பு, அவனுடைய அறைக்கு சென்றார். அவனிடம் 'புதிய ஆடை சௌகரியமாக உள்ளதா'? வேறு ஏதாவது தேவை உள்ளதா?' என்று வினவினார்.

'ஆமாம் குருவே. மிகவும் சௌகரியமாக உள்ளது. வேறெந்த தேவையும் இல்லை குருதேவா'

'சரி. உன்னுடைய கந்தலான பழைய ஆடையை என்ன செய்தாய்?'

'அதை நான் படுக்கையாக உபயோகப்படுத்துகிறேன்'

'சரி. உன்னுடைய பழைய படுக்கையை என்ன செய்தாய்? தூர எறிந்துவிட்டாயா?

'இல்லை. இல்லை குருவே. அதை நான் ஜன்னல் திரைசீலையாக உபயோகப்படுத்துகிறேன்'

'சரி. உன்னுடைய பழைய ஜன்னல் திரை சீலையை என்ன செய்தாய்?

'சூடான பாத்திரங்களைத் தூக்க சமையலறையில் பயன்படுத்துகிறன் குருவே'

'அது சரி. உன்னுடைய பழைய சமையலறைத் துணியை என்ன செய்தாய்?

'அதை நான் தரையை மெழுகி சுத்தம் செய்ய பயன் படுத்துகிறேன்'

'சரி. பழைய தரை மெழுகும் துணியை என்ன செய்தாய்?

'அது மிகவும் கிழிந்து விட்டதால், விளக்கிற்கு திரியாக பயன்படுத்துகிறேன். என்னுடைய படிக்கும் அறையில், தேவையான போது, விளக்கேற்றி படிப்பேன். மற்ற நேரங்களில், திரியை அணைத்துவிடுவேன்'

புத்தர் சீடனின் சிக்கனமான எளிய வாழ்க்கையை கண்டு, அவனை வாழ்த்தினார்.


இன்றைய விலைவாசி உயர்வில் என்றைக்கும் விட, இன்றைக்கு இக்கணத்தில் மக்கள் சிக்கனத்தின் மதிப்பை உணர வேண்டிய அவசியம் உள்ளது. இந்த பதிவில் வரும் இடுகைகளில், சிக்கனமாக வாழ்வதற்கான குறிப்புகளை பகிர்ந்து கொண்டு, என்னையும் மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.