Saturday 12 January 2013

சிக்கன சிந்தனை 8: ஓய்வுக்கால அமைதிக்கு பிராவிடண்ட் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்

நமக்கு முந்தைய தலைமுறை மக்கள், அரசாங்க உத்தியோகத்திற்கு அதிக மதிப்பு கொடுத்தனர். பழமொழி 'அரைக்காசு உத்தியோகமானாலும், அரசாங்க உத்தியோகம்' என்பது மிகப்பிரபலம். முதல்வன் படத்தில் கூட, அர்ஜீனின் மாமனார் விஜயகுமார், அரசாங்க உத்தியோகத்துடன் வந்தால், திருமணம் செய்து தருவேன் என்று கூறுவார். கூர்மையாக சிந்தித்தால், அரசாங்க உத்தியோகத்தின் பெருமை, அதனுடைய சம்பளம் மட்டுமல்ல, அதனுடைய ஓய்வூதியமும் தான் என்பதை நாம் உணரலாம். ஓய்வு கால வாழ்க்கையில் பணத்தேவையைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், எல்லோருக்கும் அரசாங்கத்தால் உத்தியோகம் தர இயலாது. எனவே, இன்றைய காலகட்டத்தில், பலர் தனியார் கம்பெனியில் வேலை தேடிக் கொள்கின்றனர். தனியார் கம்பெனிகளில் அரசாங்கத்தைப் போல் ஓய்வூதிய திட்டங்கள் கிடையாது.

ப்ராவிடண்ட் ஃபண்ட்:
இந்திய அரசாங்கம் குடிமக்களின் ஓய்வுகால வாழ்க்கை நலன் கருதி, பிராவிடண்ட் ஃபண்டை 1952ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தனியார் நிறுவனங்கள், பிராவிடண்ட் ஃபண்டில் மாதாமாதம் தனது ஊழியர்களுக்காக முதலீடு செய்கிறது. மேலும், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து, அதே பணம், மாதாமாதம் கழிக்கப்பட்டு, முதலீடு செய்யப்படுகிறது. ப்ராவிடண்ட்
ஃபண்டில் மூன்று வகைகளில் முதலீடு செய்யலாம்.
 
1. ஊழியர்கள் பிராவிடண்ட் ஃபண்ட் (Employee Provident Fund)
2. தன்னார்வ ஊழியர்கள் பிராவிடண்ட் ஃபண்ட்(Voluntary Employee Provident Fund)
3. பொது பிராவிடண்ட் ஃபண்ட்(Public Provident Fund)
  
 
1.ஊழியர்கள் பிராவிடண்ட் ஃபண்ட் (Employee Provident Fund):


 

அடிப்படை சம்பளம்(Basic salary) மற்றும் அகவிலைப்படியில் 12% பணம், ஊழியர்களுடைய சம்பளத்திலிருந்தும், இதற்கு
சமமான நிறுவனம் வழங்கும் பணத்தையும் கூட்டி, அரசாங்கத்துடைய ஊழியர்கள் ப்ராவிடண்ட் ஃபண்டில் முதலீடு
செய்யப்படும்.
 
2.தன்னார்வ ஊழியர்கள் பிராவிடண்ட் ஃபண்ட்(Voluntary Employee Provident Fund):


 

முதல் பகுதியில், கொடுத்தப் பணத்திற்கு அதிகமாக பணத்தை ஊழியர்கள் பிராவிடண்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
இப்போது முதலீடு செய்யும் பணத்திற்கு சமமான பணத்தை, தனியார் நிறுவனம் தராது. இதற்கும் உச்சகட்ட பணம், அடிப்படை
சம்பளம்(Basic salary) மற்றும் அகவிலைப்படியில் 12% பணம்.

3.பொது பிராவிடண்ட் ஃபண்ட்(Public Provident Fund):


 

ஓய்வூதிய சலுகை இல்லாத, பொது மக்கள் பயன் பெறும் வகையில், அரசாங்கம் பொது ப்ராவிடண்ட் ஃபண்ட்
ஏற்படுத்தியுள்ளது. வருடா வருடம், உச்சகட்ட முதலீட்டு பணம் 1,00,000 ரூபாய்.

இவைகளில் முதலீடு செய்வதால், சாதக பாதகங்களாக பின்வருபவைகளைக் கூறலாம்.

சாதகங்கள்:
  • கூட்டு வட்டியில், நீண்ட காலத்தில்(ஓய்வு காலத்தில்) இந்த முதலீடு, பன்மடங்காகப் பெருகி இருக்கும். கூட்டு வட்டியின் மதிப்பைப் பற்றி http://chikkanakurippugal.blogspot.ch/2012/11/blog-post_19.html, நாம் விவாதித்துள்ளோம்.
  • முதலீட்டு பணம், வட்டியோடு திரும்பப் பெறும் போது, அதற்கு வரி கிடையாது. எனவே, மொத்தப் பணம்(அசல்+வட்டி) முழுதாகக் கிடைக்கும்.
  • வருடா வருடம், 80C வரி பிரவின் படி, வருமான வரி சலுகை கிடைக்கும்.
  • நல்ல வட்டி விகிதம் கிடைக்கிறது. பின்வரும் பகுதி, ப்ராவிடண்ட் ஃபண்டின் பல்வேறு காலகட்டங்களின் வட்டி விகிதத்தைக் குறிக்கிறது. Ref: http://en.wikipedia.org/wiki/Public_Provident_Fund
 01.04.1986 to 14.01.2000.............................. 12%
 15.01.2000 to 28.02.2001............................. 11%
 01.03.2001 to 28.02.2002 ............................ 9.5%
 01.03.2002 to 28.02.2003 ............................. 9%
 01.03.2003 to 30.11.2011.............................. 8%
 01.12.2011 to 31.03.2012.............................. 8.6%
 01.04.2012 onwards.................................... 8.80%
  • பணம் பாதுகாப்பான இடத்தில் உள்ளது.
  • ஓய்வு காலத்தில், இந்தப் பணம் பெருவகையில் உதவும்.
பாதகங்கள்:
  • பணம் நீர்ம நிலையில் இருக்காது. தேவைப்படும்போது உடனே எடுக்கமுடியாது.
  • முதலீடு செய்யப்படுகிற பணம், பன்மடங்காக்கும் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படாது. கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும்.
  • வட்டி விகிதம் மாறிக் கொண்டே இருக்கும். குறைந்த வட்டி விகிதத்திற்கு சென்றால், நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

நமக்கான கேள்வி; நாமும் ப்ராவிடண்ட் ஃபண்டில் முதலீடு செய்து, ஓய்வு காலத்தை சிறப்பாக்கிக் கொள்ளலாமா?

Tuesday 1 January 2013

சிக்கன சிந்தனை 7: முதலீடா? சேமிப்பா? பண்லாமா இல்ல வேணாமா ?


நம்மில் பலருக்கு சேமிப்பிற்கும், முதலீட்டிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. 

சேமிப்பு: வரவாகும் பணத்தில் செலவை கழிக்க மிச்சமாகும் பணம்.

சேமிப்பு = வரவு - செலவு

இந்த சேமிப்பை என்ன செய்யலாம்?

பணமாக வைத்திருந்து தேவையின் போது செலவழிப்பது:எனக்குத் தெரிந்த ஒரு அம்மா, இவ்வாறு மிச்சமிருக்கும் பணத்தை வீட்டின் பல்வேறு இடங்களில் ஒளிய வைத்து விடுவார். அந்த ஒளிய வைத்த சேமிப்பு பல்வேறு அவசர காலங்களில் உதவியுள்ளது.  இந்த முறையில் வைத்த பணம் அவ்வாறே இருக்கும், பணத்தின் மதிப்பு கூடுவதில்லை.பணவீக்கத்தினால், பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்பு  உண்டு.

உதாரணமாக, 10,000 ரூபாய் பணத்தை அந்த அம்மா, 2000 வருடம் ஜனவரி 1ம் தேதி வீட்டில் எங்கோ ஒரு இடத்தில் ஒளிய வைக்கிறார் என்று கணக்கில் கொள்வோம். அதனுடைய மதிப்பு, 2013 ஜனவரி மாதம் 1ம் தேதி எவ்வளவு? அதே 10,000 ரூபாய் தான்.

பணத்தை வங்கியில் சேமிப்பு கணக்கில் சேமிப்பது:அந்த அம்மா, ஒளிய வைக்காமல், பணத்தை வங்கி சேமிப்பு கணக்கில் சேர்க்கிறார் என்று கணக்கில் கொள்வோம். ரூபாய் 10,000, 6.5% வட்டி விகிதத்தில்(சராசரி வட்டி விகிதம் http://www.tradingeconomics.com/india/interest-rate)  வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டால், அதனுடைய மதிப்பு, 2013  ஜனவரி மாதம் 1ம் தேதி எவ்வளவு?

தனி வட்டியில் மதிப்பு = 17,800 ரூபாய்
கூட்டு வட்டியில் மதிப்பு= 21,290.96 ரூபாய் (வருடா வருடம் கணக்கிடப்படும் கூட்டு வட்டி)

Thanks: http://www.freeimageslive.co.uk/files/images007/saving_money.jpg

பணத்தை முதலீடு செய்வது:அந்த அம்மா, ஒளிய வைக்காமல், பங்கு சந்தை குறியீட்டு எண்ணை அடிப்படையாக கொண்ட குறியீட்டு நிதியில் முதலீடு செய்தால்,  அதனுடைய மதிப்பு, 2013  ஜனவரி மாதம் 1ம் தேதி எவ்வளவு?

ஜனவரி 1, 2000 பங்கு சந்தை குறியீட்டு எண்: 1482.15
ஜனவரி 1,2013 பங்கு சந்தை குறியீட்டு எண்: 5937
Ref: http://www.nseindia.com/products/content/equities/indices/historical_index_data.htm

கிட்டத்தட்ட 4 மடங்காக பங்குசந்தை குறியீடு பெருகியுள்ளது. எனவே, பணத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 40,000 ரூபாயாக இருக்கும்.

எனவே, சேமிப்பை முதலீடு செய்வதால், பணத்தை பல்மடங்காக்க முடியும். பணத்தைப் பெருக்க, முதலீடுதான் சிறந்த வழி.  முதலீடு என்பது பங்குகள், வீட்டு நிலம், அரியப் பொருட்கள் என பல்வேறு வகைகளில் இருக்கலாம். ஆனால், முதலீட்டில் ரிஸ்க் அதாவது இடர்கள் அதிகம். எங்கு முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். தவறான இடத்தில் முதலீடு செய்தால் உள்ள பணத்தையும் இழக்கும் வாய்ப்பு உண்டு.  இந்தப் புத்தாண்டில், நாம் நன்றாக சேமித்து, ஆராய்ச்சி செய்து, நல்ல முறையில் பணத்தை முதலீடு செய்து, பணத்தை பல்மடங்காக பெருக்குவோம்.

உங்களுக்கான கேள்வி: முதலீடா? சேமிப்பா?  பண்லாமா இல்ல வேணாமா ?