Monday, 19 November 2012

பணத்தை பல்மடங்காக்கும் மந்திரவாதி: கூட்டு வட்டி



முன்பு ஒரு செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒரு சாமியார் பணத்தை பானையில் வைத்து ஏதேதோ செய்தபின், பணம் பன்மடங்காக காண்பிக்கிறார். பல கிராம மக்கள் அறியாமையினால் பணத்தைப் பெருக்க, அந்த போலி சாமியாரை நம்பி பணம் கொடுத்து, இழந்ததைப் பற்றி புகார் வரவே, போலீஸ் அந்த சாமியாரை கைது செய்ததைப் பற்றிய செய்தியைக் கண்டேன்.

பணத்தை பல்மடங்காக்கும் மந்திரவாதி நிஜமாகவே உள்ளார். அவர் பெயர் கூட்டு வட்டி அல்லது தொடர்ச்சி வட்டி என்று குறிப்பிடலாம். வட்டியில் இரண்டு வகைகள் உள்ளன:


  1. தனி வட்டி (Simple Interest)
  2. கூட்டு வட்டி. (Compound Interest)


தனி வட்டிக்கான சமன்பாடு = அசல் X வருடம் X வட்டி விகிதம்

உதாரணமாக, ஒருவர் 10000 ரூபாய் முதலீடு செய்தால், 5 வருடங்களில், 5 சதவிகித வட்டியில்

தனிவட்டி = 10000 X  5   X .05
     
                      = 2500

தனிவட்டியில் 5 வருடங்களில் மொத்தப் பணம் = 10000 + 2500 = 12,500

கூட்டு வட்டியில், அசலுடன் சேர்ந்து வட்டியும், அடுத்த வருட அசலாக கணக்கெடுக்கப் படும். எனவே, அதை கணக்கில் கொள்ள,

முதல் வருடம் இறுதி:  10000 x 1 x .05 =  500

இரண்டாவது வருடம் இறுதி:  10500 x 1 x .05 = 525

மூன்றாவது வருடம் இறுதி: 11025 x 1 x .05 = 551.25

நான்காவது வருடம் இறுதி: 11576.25 x 1 x .05 = 578.81

ஐந்தாவது வருடம் இறுதி: 12155.06 x 1 x .05 = 607.75

கூட்டு வட்டியில் 5 வருடங்களில் மொத்த பணம் = 12,762.81

என்ன சார், ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லையே? என்று நீங்கள் கேட்கலாம். கூட்டு வட்டியின் திறனை அறிய பொறுமை வேண்டும். நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீட்டில் வைத்திருந்தால், அதன் பலனை அறியலாம். அதற்கு நாம் தங்க விதி 72 அறிய வேண்டும்.

தங்க விதி 72:

கூட்டு வட்டி விகிதத்தால், 72 ஐ வகுக்க, எவ்வளவு வருகிறதா, அவ்வளவு வருடங்களில், பணம் இரட்டிப்பாகும்.

உதாரணமாக, கூட்டு வட்டி விகிதம் 9 என்று கணக்கில் கொண்டால், 72/9 = 8 வருடங்களில் பணம் இரட்டிப்பாகும். பணம் குட்டி போடும் என்பார்களே, அது நிஜமாக இதுதான். நீங்கள் பணத்திற்காக வேலை செய்தது போக, பணம் உங்களுக்காக இப்போது வேலை செய்து, பணத்தை உங்களுக்கு வாரி வழங்குகிறது.

தங்க விதி 72ஐ அறிந்த்தால், இப்போது பணம் கூட்டு வட்டியில் எவ்வாறு இரட்டிப்பு ஆகிறது என்று பார்க்கலாம்.

உதாரணமாக, ராமன் என்கிற நபர், 10000 ரூபாயை 25 வயதில் 9 சதவிகத கூட்டு வட்டியில் முதலீடு செய்கிறார் என்று கணக்கில் கொள்வோம். அது எவ்வாறு பல்கி பெருகுகிறது என்பதை பின்வருமாறு காணலாம்.

வயது  முதலீட்டின் மதிப்பு
25 10,000
33 20,000
41 40,000
49 80,000
57 1,60,000
65 3,20,000


அட ! முதலீடு செய்யப்பட்ட பணம், ராமன் எந்த முயற்சியும் செய்யாமல், 40 வருடங்களில் 32 மடங்காக பெருகியுள்ளது. நீங்கள் கேட்கலாம் எங்க சார் இப்பல்லாம் 9 சதவிகிதம் கிடைக்கிறது எனலாம். பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் சில வங்கிகள் மற்றும் கடன் பத்திரங்களும் நல்ல வட்டி விகிதத்தை தருகின்றன. மேலும், எவ்வளவு குறைந்த வயதில் முதலீட்டை தொடங்குகிறோம் என்பதும் முக்கியம். ஆங்கிலத்தில் சொல்வார்களே 'Earlier the Best" எனபது, கூட்டு வட்டிக்கு நன்றாக பொருந்தும்.

thanks: http://th.physik.uni-frankfurt.de/~jr/gif/phys/einst_7.jpg

ஐன்ஸ்டீன் சொன்னார்; கூட்டு வட்டி கணிதவியலின் தலைசிறந்த கண்டுபிடிப்பு. நீங்களும் கூட்டு வட்டியின் மகத்துவத்தை உணர்ந்து, பயன்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.



No comments:

Post a Comment