Monday, 26 November 2012

சிக்கன சிந்தனை 3: திட்டமிட்டு செலவழியுங்கள். பட்ஜெட் போடுங்கள்


ஒவ்வொரு வருடமும் இந்திய பட்ஜெட்டில் என்ன என்ன திட்டங்கள் அறிவிக்கிறார்கள் என்பதை கவனிக்கின்ற நாம், நமது வீட்டிற்கான பட்ஜெட் போடுகிறோமா?! என்று கேட்டால் சில குடும்பங்களைத் தவிர, பல குடும்பங்களில் இல்லை என்றே ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. அட எதுக்கு சார் வீட்டுக்கெல்லாம் பட்ஜெட் என்று நீங்கள் கேட்டால், அதன் அவசியத்தை நாம் உணர வேண்டும்.


Thanks: http://abhisays.com/wp-content/uploads/2008/02/budget2008.jpg


விஜய் டிவியில் 'உன்னால் முடியும்' நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது, ராமராஜ் வேட்டி சட்டை நிறுவனத்தின் தலைவர் நாகராஜ் அவர்களிடம், கோபிநாத் ஒரு கேள்வி கேட்டார்.

'எங்க பார்த்தாலும் ராமராஜ் விளம்பரமாகவே இருக்கே. ரொம்ப பணம் விளம்பரத்துக்கு செலவழிப்பீங்களா?'

'எங்க ஆடிட்டர் பட்ஜெட் போட்ட பணத்துக்கு மேல, ஒரு பைசா கூட எங்களால விளம்பரத்துக்கு செலவழிக்க முடியாது. நானே நினைச்சாலும் முடியாது' என்று நாகராஜ் கூறினார்.

அவ்வளவு திட்டமிடல் இருந்தால் மட்டுமே ஒரு நிறுவனத்தால் பிரகாசிக்க முடியும். ஆகவே, பணத்திற்கு திட்டமிடல் அல்லது பட்ஜெட் ரொம்ப முக்கியம்.உங்கள் வீட்டிற்கு நீங்கள்தான் நிதி அமைச்சர். உங்களுடைய நிதி எவ்வாறு செலவாக வேண்டும் என்கிற திட்டம் முக்கியம். ஆங்கிலத்தில் இதை zero based budgeting என்று கூறுவர். அதாவது, நீங்கள் மாத ஆரம்பத்தில் திட்டமிட்ட பணத்திற்கும் செலவழித்த பணத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம், பூச்சியமாக இருக்க வேண்டும்.

பூச்சியத்தை அடிப்படையாக கொண்ட பட்ஜெட்;(Zero Based Budgeting)

Budgeted amount at the beginning of month - Spent amount at the end of the month = 0

மாத ஆரம்பத்தில் திட்டமிட்ட பண ஒதுக்கீடு - மாத கடைசியில் செலவழித்த பணம் = 0



நாம் ஏற்கனவே பார்த்தபடி, வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்காக, அத்தியாவசிய செலவுகளையோ, உங்களுக்கு மனதிற்கு பிடித்த விஷயங்களுக்கு செலவிடுவதையோ நிறுத்த வேண்டிய அவசியமில்லை. திட்டமிடுதல் அல்லது பட்ஜெட்டின் முக்கியத்துவத்தை நாம் இங்கு உணரலாம். உங்களுக்கு வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிடுவது பிடித்த விஷயமாக இருக்கலாம். ஆனால், ஒரு மாதத்திற்கு இவ்வளவு பணம் என்று திட்டமிடுங்கள், அதற்கு மேல் ஒரு பைசாவும் செலவாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு பணம் செலவழிக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தால், ஒன்று நீங்கள் சரியாக திட்டமிடாமல் இருந்திருக்கலாம், அல்லது நீங்கள் திட்டத்தை மதிக்காமல் மீறுபவராக இருக்கலாம். சரியாக திட்டமிடாத பட்சத்தில், அடுத்த மாதத்தில் திட்டத்தை மேம்படுத்துங்கள். திட்டத்தை வேண்டுமென்ற கட்டுபாடின்றி மீறும் பட்சத்தில், நீங்கள் சிக்கன வாழ்க்கையின் அவசியத்தை உணரவில்லை என்று பொருள்.

இந்த பட்ஜெட் போடுவதில், வருமானத்தில் எவ்வளவு சதவிகிதம் செலவழிக்க வேண்டும், எதற்கு செலவழிக்க வேண்டும், எவ்வளவு சதவிகிதம் சேமித்து முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு சதவிகதம் ஓய்வு காலத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று, மிக தெளிவாக அடிப்படை செலவுகள் வரை திட்டமிடுதல் முக்கியம். பட்ஜெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, திட்டமிட்டு வாழ்வோம் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment