சிக்கனம் என்பதற்கு ஆங்கில அகராதியில் "Frugality" என்று கூறுவார்கள். சிக்கனம் என்பதை பலவாறு நாம் விளக்கலாம். தேவையில்லாத விஷயங்களை அ்ல்லது செலவுகளைத் தவிர்த்தல், அளவாக அல்லது கவனமாக செலவழித்தல், வருமானத்திற்குட்பட்ட வாழ்க்கை வாழ்தல், பயன்படுத்தும் பொருட்களை வீணாக்கமாலிருத்தல், பணத்தை மிச்சம் பிடித்து சேமிப்பது வகையறாக்களை சிக்கனம் என்ற ஒற்றை வார்த்தை, சிறந்த முறையில் எடுத்துரைக்கிறது.
நமது முன்னோர்கள் சேமிப்பின் அவசியத்தை நன்கு உணர்ந்திருந்தனர். கிணறு தோண்டும் போது, திடீரென்று பணப் புதையல் கிடைத்தது என்றெல்லாம் நாம் கேள்விப்படும் போது, முன்னோர்களின் பண சேமிப்பின் பிண்ணனியினை நாம் அலசி ஆராய்ந்த்தில்லை. 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்று சிக்கனமாக வாழும் வாழ்க்கையின் சுவையை நமக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளனர். ஆனால், இன்றைய இளைஞர்களிடம் சிக்கன வாழ்வின் அருமை பெருமை தெரிகிறதா? என்றால், மிகக் குறைந்த அளவு மக்களே உணர்ந்துள்ளனர் என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டியுள்ளது. ஏனென்றால், முன்பு இல்லாததை விட இப்போது ஹோட்டல்களும், துரித உணவு விடுதிகளும், பல மாடி சினிமா கொட்டகைகளும் நிரம்பி வழிகின்றன. முந்தைய தலைமுறை அரசாங்க உத்தியோகத்திலிருந்து கிடைக்கும் ஓய்வூதியத்தினாலோ அல்லது ஒழுங்கான சேமிப்பினாலோ தங்களுடைய ஓய்வு காலத்தை சுகமாக ஆக்கிக் கொண்டுள்ளனர். மேலும், அவர்களுடைய வாழ்க்கையில் அன்றாட தேவைகளும், செலவுகளும், விலைவாசிகளும் இன்றைய காலம் போல பன்மடங்காக இல்லை. ஆனால், இன்றைய இளைஞர்கள் எதிர்காலத்திற்கான பணத் தேவைகளை சந்திக்க எந்த அளவிற்கு தயாராக உள்ளனர்?!
Thanks: http://blogs-images.forbes.com/sageworks/files/2011/07/piggy_bank.jpg
சிக்கனத்தின் பெருமையை உணர, புத்தரின் வாழ்வில் நடந்த ஒரு கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
ஒரு சீடன் புத்தரிடம் வந்து, 'குருவே !!! என்னுடைய ஆடை கந்தலாகி விட்டது. புதிய ஆடை வேண்டும்' என்றான்.
புத்தர் அவனை ஆழமாக நோக்கினார். அவன் கூறுவது நிஜம்தான். அவனுடைய ஆடை மிகவும் மோசமாகவே இருந்தது. அவனை கடைக்கு அழைத்துச் சென்று புதிய ஆடையை வாங்கிக் கொடுத்தார்.
சிறிது நாட்களுக்குப் பின்பு, அவனுடைய அறைக்கு சென்றார். அவனிடம் 'புதிய ஆடை சௌகரியமாக உள்ளதா'? வேறு ஏதாவது தேவை உள்ளதா?' என்று வினவினார்.
'ஆமாம் குருவே. மிகவும் சௌகரியமாக உள்ளது. வேறெந்த தேவையும் இல்லை குருதேவா'
'சரி. உன்னுடைய கந்தலான பழைய ஆடையை என்ன செய்தாய்?'
'அதை நான் படுக்கையாக உபயோகப்படுத்துகிறேன்'
'சரி. உன்னுடைய பழைய படுக்கையை என்ன செய்தாய்? தூர எறிந்துவிட்டாயா?
'இல்லை. இல்லை குருவே. அதை நான் ஜன்னல் திரைசீலையாக உபயோகப்படுத்துகிறேன்'
'சரி. உன்னுடைய பழைய ஜன்னல் திரை சீலையை என்ன செய்தாய்?
'சூடான பாத்திரங்களைத் தூக்க சமையலறையில் பயன்படுத்துகிறன் குருவே'
'அது சரி. உன்னுடைய பழைய சமையலறைத் துணியை என்ன செய்தாய்?
'அதை நான் தரையை மெழுகி சுத்தம் செய்ய பயன் படுத்துகிறேன்'
'சரி. பழைய தரை மெழுகும் துணியை என்ன செய்தாய்?
'அது மிகவும் கிழிந்து விட்டதால், விளக்கிற்கு திரியாக பயன்படுத்துகிறேன். என்னுடைய படிக்கும் அறையில், தேவையான போது, விளக்கேற்றி படிப்பேன். மற்ற நேரங்களில், திரியை அணைத்துவிடுவேன்'
புத்தர் சீடனின் சிக்கனமான எளிய வாழ்க்கையை கண்டு, அவனை வாழ்த்தினார்.
இன்றைய விலைவாசி உயர்வில் என்றைக்கும் விட, இன்றைக்கு இக்கணத்தில் மக்கள் சிக்கனத்தின் மதிப்பை உணர வேண்டிய அவசியம் உள்ளது. இந்த பதிவில் வரும் இடுகைகளில், சிக்கனமாக வாழ்வதற்கான குறிப்புகளை பகிர்ந்து கொண்டு, என்னையும் மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
No comments:
Post a Comment