Saturday, 24 November 2012

சிக்கன சிந்தனை 2: வரவு செலவு கணக்கு வைத்திருங்கள்


நமது ஊர் மிராசுதார்களும், பண்ணையார்களும் எவ்வளவுதான் பணக்காரர்களாக இருந்தாலும், எப்போதும் தங்களுடைய வரவு செலவுகளை கணக்கு வைத்திருந்தனர். அதற்கென ஒரு கணக்குப்பிள்ளையை அவர்கள் வேலைக்கு நியமித்திருந்தனர். தங்களிடம் எவ்வளவு பணம் வரவாக வருகிறது, எவ்வளவு பணம் செலவாகிறது என்பதை எப்போதும் அறிந்திருந்தனர். அவ்(வாறு கவனமாக பணத்தை செலவழிக்காவிட்டால், அவர்கள் கூடிய சீக்கரம் பணத்தை இழந்து, சொத்தை இழக்க நேரிடும் என்பதை உணர்ந்திருந்தனர். அவர்களுடைய சொத்தின் நிகர மதிப்பை அறிந்திருந்தனர். அதை ஆங்கிலத்தில் Net Worth என்று குறிப்பிடுவர்.

சொத்தின் நிகர மதிப்பு =

 சொத்துக்களின் மொத்த மதிப்பு - அடைக்கப்பட வேண்டிய கடன்கள்

Networth  = Total Asset Value - Total Debts


உங்களுக்கு உங்களுடைய தற்போதைய சொத்தின் நிகர மதிப்பு தெரியாவிட்டால், நீங்கள் இன்னும் சிக்கனமான வாழ்க்கையின் முக்கியமானதொரு பழக்கத்தை பின்பற்றவில்லை என்று பொருள். உங்களுடைய எல்லா சொத்துக்களின் மதிப்பை தொகுத்து வைத்துக் கொண்டு கூட்டுங்கள். அந்த சொத்துக்கள் அசையும் அல்லது அசையா சொத்துக்களாகவோ, பணத்தின் கையிருப்பாகவோ இருக்கலாம். அடுத்து, உங்களுடைய எல்லா கடன்களையும் தொகுத்து வைத்துக் கூட்டுங்கள். அந்தக் கடன்கள் வீட்டு கடனாகவோ, வாகன கடனாகவோ, குழந்தைகளின் கல்விக் கடனாகவோ இருக்கலாம். இப்போது உங்களுடைய சொத்தின் நிகர மதிப்பை, மேற்கூறிய சமன்பாட்டால் கணக்கிடுங்கள். அது, நேர்மறை (Positive) அல்லது எதிர்மறையாகவோ (Negative) இருக்கலாம். நேர்மறையாக இருக்கும் பட்சத்தில், கொஞ்சம் திருப்தி பட்டுக் கொள்ளலாம். எதிர்மறை எனில், நீங்கள் மிகவும் முயற்சி செய்து அதை நேர்மறையாக மாற்ற வேண்டும். நேர்மறையாக இருக்கும் பட்சத்திலும், எல்லா கடன்களையும் செலுத்தி விட்டு, கடனில்லாத வாழ்க்கை வாழ்வதின் சுவையே தனி. நல்லதோரு நிகர சொத்து மதிப்பு வைத்திருக்க வேண்டியது, அதை அதிகரிக்க வேண்டியது என்பது, நிம்மதியான வாழ்க்கைக்கு அடிகோல்.

உங்களுடைய ஒவ்வொரு வரவு மற்றும் செலவையை எழுதி வையுங்கள். செலவென்பது,  ஒரு காபி குடித்த அல்லது பஸ்ஸிற்கு டிக்கெட் வாங்கியதாக கூட இருக்கலாம். வரவென்பது சம்பளமாக இருக்கலாம். ஒவ்வொரு மாத இறுதியிலும், நீங்கள் அந்த வரவு செலவு கணக்கை ஒவ்வொரு வரியாகப் படித்து, எந்த எந்த செலவு அவசியமானது, எது அனாவசியமானது என்று குறித்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவை குறைக்க, நீக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டு, அடுத்த மாதத்தில் அதைப் பின்பற்றுங்கள். இவ்வாறு செய்வதின் மூலம், உங்களுடைய வீண் செலவுகள் குறைந்து, உங்களுடைய சொத்தின் மதிப்பு கூடும்.

Thanks: http://www.diyplanner.com/files/expense_tracker_v1.0.jpg

இதை, எடை குறைப்பவரின் திட்டத்தோடு ஒப்பிடலாம். ஒரு மனிதர் எடையை குறைப்பதை குறிக்கோளாக கொள்கிறார் என்று வைத்துக் கொண்டால், அவர் ஒவ்வொரு வேளை சாப்பிடும் போதும், அதன் கலோரி மதிப்பை பார்த்து சாப்பிடுவார். அதிக கலோரி உணவுகளைத் தவிர்ப்பார். மேலும், அவ்வப்போது, தன்னுடைய எடையை பார்த்துக் கொள்வார். உடல்நலத்தை கவனித்துக் கொள்வார். அதைப் போல நீங்களும், வீண் செலவுகளை தவிர்த்து, உங்களுடைய சொத்து மதிப்பை கவனித்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment