எனது பிறந்த நாள் வந்தபோது பைவ் ஸ்டார் சாக்லேட் பார்களை வாங்க அருகிலிருந்த பல்பொருள் அங்காடிக்கு சென்றேன். அங்கு பைவ் ஸ்டார் சாக்லேட் பார்களை சில்லரையாகவும், மேலும் மொத்தமாகவும் அலமாரியில் வைத்திருந்தனர். எனக்கு கிட்டத்தட்ட 40 முதல் 50 தேவைப்பட்டது. சில்லரையாக வாங்கினால், ஒன்று 10 ரூபாய் வீதம் 400 ரூபாய் ஆகும். ஆனால், பைவ் ஸ்டார் அட்டை டப்பாவாக வாங்கினால், அதே 40 பார்களின் விலை 340 ரூபாய்தான். ஒரு அட்டை டப்பாவில் 40 பார்கள் இருக்கும். மொத்தமாக வாங்கும் போது, பொருளின் நிகர விலை குறைகிறது. இது கிட்டத்தட்ட எல்லா பொருட்களுக்கும் பொருந்தும். உதாரணமாக, 1/2 கிலோ காம்பிளானில் உள்ள 1 கிராம் காம்ப்ளானின் விலையை விட, 1 கிலோ காம்ப்ளானில் உள்ள 1 கிராம் காம்ப்ளானின் விலை குறைவு. இது பற்பசை, துவரம் பருப்பு முதல் சமையல் எண்ணை வரை எல்லா பொருட்களுக்கும் பொருந்தும்.
அப்ப சரி சார் ! இனிமே எல்லாத்தையும் மொத்தமா வாங்கிப் போட்டுடறேன்னு நீங்க சொன்னீங்கன்னா, அது எல்லா பொருட்களுக்கும் பொருந்தாது என்பதுதான் விடை. எந்த பொருளை நீங்கள் மொத்தமாக வாங்கினால், கெடுவதற்கு முன்பு பயன்படுத்தி விடுவீர்களோ, அந்தப் பொருட்களை மட்டும் மொத்தமாக வாங்குங்கள். உதாரணமாக, நீங்கள் கோதுமையை மொத்தமாக வாங்கிப் போடுகிறீர்கள் என்று கணக்கில் வைத்துக் கொண்டால், அது கெடுவதற்குள் நீங்கள் உபயோகப் படுத்துவிடுவீர்களா என்பதை யோசிக்க வேண்டும். என்றோ ஒரு நாள் நான் சப்பாத்தி சாப்பிட மட்டும்தான் கோதுமையை பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொன்னால், மொத்தமாக வாங்குகிறேன் என்று 10 கிலோ மூட்டை வாங்கி வைத்தால், புழு வந்து அது கெட்டு விடலாம். பணத்தை மிச்சப்படுத்துவதற்கு பதிலாக, நீங்கள் பணத்தை இழக்க நேரிடும்.
இந்தமாதிரி மொத்தமாக வாங்குவதற்கு, சில்லரை கடைகளை நாடாமல், நீங்கள் மொத்த விலை கடைகளுக்கு சென்றால், குறைந்த விலையில் நீங்கள் வாங்கலாம். சென்னையில் உள்ள சில பெற்றோர்கள் ஜீன் மாதம் பள்ளிகள் திறக்கும் நேரத்தில், நோட்டுப் புத்தகங்களை மொத்தமாக வாங்க, பாரீஸ் கார்னர் செல்வது என்பது, சிக்கனமான முறையில், குழந்தைகளின் படிப்பிற்கு பணத்தை செலவழிக்கத்தான். மொத்தமாக வாங்கும்போது, அது ஆங்கிலத்தில் சொல்வார்களே Win-Win situation(வெற்றி-வெற்றி சூழ்நிலை) என்று, உங்களுக்கு மொத்த விலையில் புத்தகங்களை வாங்க முடிகிறது, மேலும் கடைக்காரருக்கும் பொருட்களை மொத்தமாக விற்க முடிகிறது.
Thanks: http://webdevelopmenti.com/wp-content/uploads/2012/06/Make-money-by-Freelancing-and-outsourcing.jpg
இந்த மாதிரி மொத்தமாக வாங்குவதென்பது, சீக்கிரம் கெடாத பொருட்களான உடைகள், நோட்டு புத்தகங்கள் வகையறாக்களுக்கு நன்றாக பொருந்தும்.
இந்த சிந்தனையை நீங்களும் சிந்தித்து, கடைபிடித்து பயனடைவீர்கள் என நம்புகிறேன்.
No comments:
Post a Comment