Thursday, 26 February 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - கடனில்லாத வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை

வேதாத்திரி மகரிஷி அவர்கள் கடனைப் பற்றிக் கூறும் போது, கடன் நெருஞ்சி முள்ளைப் போன்றது என்பார். நெருஞ்சி முள் சிறிதானலும், அது உடம்பில் உள்ளவரை, கொடுக்கும் வலி தாங்க முடியாதது. அதேபோல, கடன் நமது வாழ்க்கையில் வந்துவிட்டால், அது கொடுக்கும் மன இறுக்கம் மிக அதிகம். கம்பன் கூட 'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று ராவணன் ராமனிடம் தோல்வி கண்டபோது கலங்கியதை உவமையுடன் விளக்கினார். எந்தப் பொருளை வாங்கும்போதும், அதற்கான பணத்தை சேமித்து, நமது வாங்கும் திறனை அதிகரித்துவிட்டு, பணம் கொடுத்து வாங்க வேண்டும். கடன் அட்டை கொண்டோ, நண்பர்கள் அல்லது வங்கியில் கடன் வாங்கியோ, வாங்கக் கூடாது. சொந்த தொழில் தொடங்க, வீடு வாங்குவதற்காக தவிர, மற்ற சமயங்களில் கடன் வாங்க வேண்டாம்.  தொழில் தொடங்க அதிக முலதனம் தேவை. வீடு என்பது அத்தியாவசியமான விஷயம், அவைகளுக்கு மட்டும் கடன் வாங்கலாம். அவைகளுக்கு வட்டி விகிதம் குறைவு. மேலும், அரசாங்கத்தின் வரி விலக்கு உண்டு. அவைகளுக்கு கூட, எவ்வளவு குறைவாக கடன் வாங்க இயலுமோ, அவ்வளவே வாங்க வேண்டும். அதையும் கூட, வெகு சீக்கரத்தில் அடைத்து விட வேண்டும். சொந்தமாக பணம் சேர்த்து, வீடு வாங்கினால், தொழில் தொடங்கினால், இன்னும் உசிதம். கடனில்லாத வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை.

Wednesday, 25 February 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - எப்போதும் அவசர தேவை நிதியை வைத்திருங்கள்

அவசர தேவை நிதி(Emergency Fund) கடன் என்கிற படுகுழிக்குள் விழாமல் நம்மை காப்பாற்றும். அவசர தேவை என்பது திடீரென மருத்துவ செலவு, திடீரென வீட்டில் செய்யவேண்டிய மராமத்து வேலை, திடீர் பணி இழப்பு, திடீர் வாகன பிரச்சனை போன்ற சமயங்களில் யார் கையையும் எதிர் பாராமல், வங்கி கடன் வாங்காமல் பிரச்சனையை சமாளிக்க உதவும். குறைந்தப் பட்சம் ஒரு மாதத்திற்கான செலவு முதல் 3- 6 மாதத்திற்கான செலவிற்கான பணத்தை அவசர தேவை நிதியாக வைத்திருப்பது உசிதம். அவசர தேவை நிதி என்பது அவசர தேவைக்கு மட்டுமே. அதை கொடைக்கானல் விடுமுறைக்கோ அல்லது தேவையில்லாத பொருட்களை வாங்குவதற்கோ உபயோகப் படுத்தக் கூடாது. அவசர தேவை நிதியை உபயோகப் படுத்தும் சூழ்நிலை வருமானால், முதல் வேலையாக பணத்தை சேமித்து, அவசர தேவை நிதியை செலவுக்கு முன்பிருந்த நிதி நிலைமைக்கு கொண்டுவர வேண்டும். மேலும், அவசர தேவை நிதி பணமாக இருக்க வேண்டும். எளிதாக உபயோகப் படுத்தும் வகையில் நீர்மமாக(Liquidity), நல்லதொரு வங்கியின் சேமிப்புக் கணக்கில் இருக்க வேண்டும். கடன் அட்டை அவசர நிதியாகாது. அவசர நிதியை எங்கேனும் முதலீட்டில் இருந்தால், உடனே பணமாக்க இயலாது. அவசர தேவை நிதி என்பது மன அமைதிக்கு, கடன் அரக்கனை அண்டாமல் இருக்க செய்வதற்காக மட்டுமே. முதலீட்டிற்காக அல்ல.

Tuesday, 24 February 2015

சிக்கனம் சின்னசாமி அறிவுரை - சம்பாதிப்பதை விட குறைவாக செலவு செய்

சிக்கனத்தைப் பற்றி ஒரு வரியில் குறிப்பிட வேண்டுமானால், 'சம்பாதிப்பதை விட குறைவாக செலவு செய்' என்று கூறிவிடலாம். மாதந்தோரும் செலவுகளுக்கு வரைமுறை இட்டு (Budget), செலவுகளை நமது சம்பளத்தைவிட குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வருமானத்தை மீறி பெரிய செலவு ஏதேனும் எதிர்காலத்தில் வருமானால், அதற்கான சேமிப்பைத் தொடங்கி மாதந்தோரும் ஒதுக்க வேண்டும். எந்த ஒரு சமயத்திலும் கடன் கூடவே கூடாது. 

ஏதேனும் செலவு, நமது வரைமுறையைத் தாண்டலாம் என உணர்ந்தால், அந்த செலவைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் மாதத்திற்கு 1000 ரூபாய், ஹோட்டலில் சாப்பிடுவதற்கு என்று ஒதுக்கி இருந்தால், 1000 ரூபாய் தாண்டிவிட்டால், அடுத்த மாதம் வரை ஹோட்டல் செலவைத் தவிர்க்க வேண்டும்.

இதையே தமிழில், விரலுக்கேத்த வீக்கம் என்று கூறுவார்கள்.